/indian-express-tamil/media/media_files/2025/09/30/tvkmh-2025-09-30-08-04-41.jpg)
கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் நடந்த மரண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் கரூர் த.வெ.க மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கியிருந்தார். இதில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி 40-க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல்களையும், ஆளும்கட்சி சரியாக திட்டமிட்டல் இல்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கரூரில் இந்த சம்பவம் தொடர்பாக 3 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டிநிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 105 (கொலை அல்லாத குற்றவியல் மனிதப் படுகொலை), 110 (குற்றவியல் மனிதப் படுகொலைக்கு முயற்சித்தல்), 125 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்), மற்றும் 223 (உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை) உள்ளிட்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது,
இதற்கிடையில், தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டம், 1992-இன் பிரிவு 3-ம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே கைது செய்யப்பட்ட த.வெ.க மாவட்ட செய்லாளர் மதியழகனின் மனைவி, என் கணவர் மீது சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு காவல்துறை தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது கணவர் கைது குறித்து காவல்துறை, தன்னிடம் தெரிவிக்கவே இல்லை என்றும், நானும் கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறியுள்ளார்.
என் கணவர் கைது செய்யப்பட்ட செய்தி டிவியில் பார்த்தபோது தான் எனக்கே தெரிந்தது. என் கணவரிடம் நான் இன்னும் பேசவே இல்லை. அவருக்கு என்ன ஆனாது என்று எனக்கு தெரியவில்லை. தயவு செய்து அவரை என்னிடம் பேச வையுங்கள், அவர் கைது செய்யப்பட்டது குறித்து எந்த வீடியோ ஆதாரமும் வரவில்லை. அஜித்குமார் மாதிரி ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும், என் கணவருக்கு சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு. அஜித் குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.