தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள், தென் தமிழகத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களுக்காக போக்குவரத்து வழிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியலில் அடியெடுத்து வைக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அடுத்து கட்சியின் முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது.
அதே சமயம் காவல்துறை அனுமதி, அதற்கான கேள்விகளுக்கு பதிலாளிக்க தாமதம் ஆகிய காரணங்களால், மாநாடு நடைபெறாத நிலையில் அடுத்து அக்டோபா 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என்று அறிக்கப்பட்டு, காவல்துறை அனுமதியும் பெற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்களா? சினிமா பிரபலங்கள் யாரேனும் வருவார்களா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் தொடர்ந்து மாநாட்டுக்கு வருவத்ற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, விக்கிரவாண்டி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையிலும், திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும், திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“