தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டுவிழா வரும் பிப்ரவரி 26-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க 2000 பெருக்கு பாஸ் வழங்க த.வெ.க தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, விரைவில், முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களை நேரடியாக சந்திக்க உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இதன் மூலம் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில், ஜன நாயகன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய், இதுவே தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் விஜய், கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில், தனது கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடித்தினார். இந்த மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், தற்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக பணியாற்றி வரும் விஜய், புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து தேர்தலை சந்திக்க பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைத்து வருகிறார். இடையில் தான் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பிலும் பங்கேற்று வரும் விஜய், சமீபத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை நேரில் சந்தித்தார். தனது கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் என, அனைவரையும், 2026 சட்டசபை தேர்தலை நோக்கி முன்னேற்றி வரும் விஜய், தனது கட்சியின் முதல் ஆண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறார்.
பிப்ரவரி 26-ந் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய், வரும் பிப்ரவரி 26-ந் தேதி தனது கட்சியின் முதல் ஆண்டு விழாவுடன் சேர்த்து, பொதுக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல்கள் வெளியானது. சென்னை பூச்சேரியில் காலை 9 மணிக்கு இந்த ஆண்டு விழா தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் பாஸ் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், 2000 பேருக்கு பாஸ் வழங்க த.வெ.க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயை பார்க்க, அதிகளவு கூட்டம் கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.