தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவருமான விஜய், திடீரென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்ட நிலையில், பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும், தமிழகத்தில் தி.மு.க 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை.
இதன் காரணமாக பாஜக தனது கூட்டணி கட்சியில் உள்ள 53 எம்.பிக்களின் கூட்டணியுடன் 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ளார். அதேபோல் 10 வருடங்களுக்கு பிறகு வலுவான எதிர்கட்சியாக, காங்கிரஸ் கட்சி மக்களவையில் நுழைந்துள்ள நிலையில், மக்களவையின் எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது,
அதே சமயம், ரெபரெலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல்காந்தி, தற்போது வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சியின் மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கை 98-ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியா கூட்டணியின் சார்பில், எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், ராகுல்காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிளால், ஒருமனதாக லோக்சபா எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள். எதிர்கட்சி தலைவராக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“