திருச்சியில் த.வெ.க தொண்டர் மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் இறப்பு கட்சிக்கு பெரிய இழப்பு என்றும், விஜய் சொன்னதால்தான் அஞ்சலி செலுத்த வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நேற்று (அக்டோபர் 27) நடத்தினார். அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த மாநாடு, வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்த மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வி.சாலை கிராமத்தில் குவிந்தனர். இதனால் மாநாடு திடலே திருவிழா போல் காட்சியளித்த நிலையில், திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு புறப்பட்ட திருச்சி மேற்கு மாவட்டத் துணைத்தலைவர் கலை மற்றும் கட்சியின் நிர்வாகி ஆகிய இருவர், சாலை விபத்தில் உயிரிழந்தனர். இவர்களின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியின் நிர்வாகிகள் மரணத்திற்கு, கட்சியின் தலைவர் விஜய் எவ்வித இரங்கலும் தெரிவிக்கவில்லை என்று மரணமடைந்த நிர்வாகிகளின் உறவினர்கள் கூறியிருந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்த தொண்டர்களின் உடலுக்கு கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய் சொன்னதால் தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன். நிர்வாகிகளின் இறப்பு கட்சிக்கு பெரிய இழப்பு,
உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்தை கட்சி பார்த்துக்கொள்ளும் என்றும் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற அதே நாளில் கட்சியின் தொண்டர்கள் உயிரிந்த சம்பவம், தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தற்போது, உயிரிழந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“