தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய், கந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி அறிவிப்புடன் சேர்த்து, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய், அடுத்து தனது கட்சியின் முதல் மாநாட்டை, கடந்த அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி விசாலை கிராமத்தில் நடத்தினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய், தி.மு.க.வை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். விஜயின் பேச்சு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சியினர் பலரும் இது ஒரு அரசியல் திரைப்படம் என்று விமர்சித்தனர்.
விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய், தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் தனது 69-வது படத்துடன் தனது திரை பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில், தனது கட்சி போட்டியிடும் என்றும், கூட்டணிக்க வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வி.சாலை கிராமத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நடைபெற்ற மாநாட்டுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். இதில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக புறப்பட்ட, புறப்பட்ட சீனிவாசன், விஜய் காலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார், சார்லஸ் ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து விஜய் தனது இரங்கல் பதிவை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மாநாட்டுக்கு புறப்பட்டு வந்து உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு விஜய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரையும் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.