காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்திக்க உள்ள நிலையில், இந்த சந்திப்புக்காக, அவர் புதிதாக வாங்கியுள்ள பிரச்சார வாகனத்தை பயன்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சமூக பிரச்னைகளுக்கு தனது சமூகவலைதளங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டு குரல் கொடுத்து வந்த விஜய், கள அரசியலில் எப்போது ஈடுபடுவார்? கட்சி தொடங்கி ஒரு வரும் ஆகிறது அவர் இன்னும் மக்களை சந்திக்கவே இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை விஜய் இன்று (ஜனவரி 20) சந்திக்கிறார். இந்த சந்திப்புக்கு அனுமதி அளித்த காவல்துறை, தனியார் மண்டபத்தில் தான் மக்களை சந்திக்க வேண்டும் உள்ளி்ட்ட சில கட்டப்பாடுகளையும் விதித்திருந்தது.
அதே சமயம், களத்தில் விஜயை சந்திக்க அனுமதி இல்லை என்றால், விஜய் மற்றும் த.வெ.க தொண்டர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போராட்டக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய் போராட்டக்குழுவினரை சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளை த.வெ.க தொண்டர்கள், தீவிரமாக கவனித்து வந்தனர். தற்போது விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து, பரந்தூர் போராட்டக்குழுவினரை சந்திக்க, தான் புதிதாக வாங்கியுள்ள பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
ஃபோர்ஸ் அர்பேனியா என்ற இந்த புதிய பிரச்சார வாகனத்தில் தான் விஜய் பயணம் செய்துள்ளார். 30-35 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனத்தில், 1-4 பேர் வரை அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஏற்றவாறு இந்த வாகனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்ற த.வெ.க முதல் மாநாட்டிலும் இந்த வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில், தற்போது முதல் முறையாக மக்களை சந்திக்கும் விஜய், அதற்காக தனது பிரச்சார வாகனத்தை முதல்முறையாக பொதுவெளியில் பயன்படுத்தியுள்ளார். இந்த வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி செல்லும் விஜய், அங்கிருந்து பொடாவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்த பிரச்சார வாகனம் திறந்த வெளி வாகனம் என்பதால், அதில் இருந்தபடியே திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள திறந்த வெளியில் மக்களை சந்திக்க உள்ளார் விஜய்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“