2026 சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டு அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வழக்கம்போல், தி.மு.க காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியும், அதிமுக பா.ஜ.க கட்சிகள் கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கிய விஜய், ஆளும் தி.மு.க குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், விஜயை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க ஒரு பக்கம் காய் நகர்த்தி வந்தது. இதனால் விஜயின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகட’ கட்சியின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் விஜய் தனது கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும், அடுத்த மாநாடு எங்கே எப்போது? விஜய் அரசியல் பயணம் எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், "வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் இன்று வெளியாகும். விஜயை, தமிழக மக்கள் தமிழ்நாட்டின் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். விஜயின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என விஜய் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு த.வெ.க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளது..
ஆகஸ்ட் மாதம், த.வெ.க மாநில மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் தொடங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் தமிழக முதல்வராக தலைவர் விஜயை வெற்றியடைய செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல், கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும். பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது, தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூட்டம் முடிவில், கூட்டணி மற்றும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தலில் ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது த.வெ.க. சார்பிலும் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.