மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சீரும் சிறப்புமாக செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாப வழிநடத்துகிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முணையத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎஸ்எஸ் விமான தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு தயாராக இருந்த சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்,
நமது பாரத பிரதமர் ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்திக்கொண்டு காசி தமிழ் சங்கத்தை நமக்கு கொடுத்து சவுராஷ்டிரா தமிழ் சங்கம் கொடுக்க இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம். மத்திய அரசின் திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து சீரும் சிறப்புமாக செயல்படுத்திக்கொண்டிருக்கின்ற தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சியில் சென்னைக்கு 1260 கோடிக்கான நமது திட்டத்தையும் , சென்னை விமான நிலையத்திற்கான திட்டத்தையும், வந்தே பாரத் ரயில் நிலையத்தையும் நமக்கு கொடுத்து இன்னும் பல திட்டங்களை கொடுக்க வந்துள்ள நமது பிரதமர், தமிழகத்தின் மீது எப்போதும் மிகப்பெரிய பாசத்தையும் அன்பையும் வைத்துள்ளார். அதனால் தான் தமிழகத்திற்கு எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் பலாயிரக்கணக்கான திட்டங்களை கொடுத்து வருகிறார்.
தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரயில்வேயில் இந்த ஆண்டுக்கு மட்டும் 1000 கொடிக்கான திட்டத்தை கொடுத்திருக்கிறார். 9 புதிய ரயில் திட்டங்களை கொடுத்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க காசி தமிழ் சங்கத்தை நடத்திவிட்டு இப்போது வரும் ஏப்ரல் 17-ந் தேதி சவுராஷ்டிரா தமிழ் சங்கத்தையும் நடத்த இருக்கின்றோம் என்று பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”