மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தென்மண்டல வளர்ச்சி மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிஆர்.பாண்டியன் வலியுறுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த முன் பட்ட குருவை மூழ்கி அழுகத் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விளை
நிலங்களை கணக்கீடு செய்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். காப்பீடு செய்திருந்தால் அவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் வரையிலும் இழப்பீடு பெற முடியும். காப்பீட்டு திட்டத்தை இரண்டாவது ஆண்டாக தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். எனவே அதற்கு பொறுப்பு ஏற்று தமிழக முதலமைச்சர் உரிய நிவாரண வழங்க உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் நீரால் சூழப்பட்டதால் மூன்றாவது முறையாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையிலும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படாதது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கணக்கெடுப்பு நடத்தி பாதிப்பு ஏற்ப உரிய நிவாரணங்கள் வழங்குவதற்கு முன்வர வேண்டும். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சந்தைப்படுகை மாரியப்பன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரி கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள பாதிப்பால் கரையோர கிராமங்கள் கரூர் முதல் சிதம்பரம் வரை பயிரிடப்பட்டு பாதிக்கப்பட்ட வாழை, சோளம், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை இதுவரையிலும் யாரும் கண்டிராத வகையில் அபரிதமான மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு உள்ளிட்ட மலையடிவார கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது.
தற்போதைய சூழலில் இம்மழைப்பொலிவு பேரழிவு ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் மேக வெடிப்பு என்கிற பெயரில் எதிர்பாராத மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளின் கொள்ளளவை விட பல மடங்கு மழைநீர் ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்ப்பதால் பல நகரங்கள் கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதும், வானுயர்ந்த சொகுசு விடுதிகள், குடியிருப்புகள் உருவாக்கப்ட்டதோடு, மேலும் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால் இயற்கைவளம் பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றங்களுக்கு அடிப்படை காரணமாக உள்ளது.
எனவே மேற்கு தொடர்ச்சி மலை வளம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டிருக்கிற மாநிலங்களுக்கு உள்ளது. குறிப்பாக கேரள மாநிலம் தமிழகத்தை ஒட்டிய மலைப்பகுதிகளில் மிகப்பெரும் நகரிய பகுதிகள் உருவாக்கப்பட்டு குடியிருப்புகள் ஏராளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு செங்கோட்டை முதல் திருவனந்தபுரம் வரையிலும் சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதி முற்றிலும் அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குடியிருப்புகளாகமாறி உள்ளது. வானுயர்ந்த கட்டிடங்கள், சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. இதனை எல்லாம் தடுத்து நிறுத்தி மலைவளம் பாதுகாப்பது தமிழக அரசால் மட்டும் முடியாது.
எனவே திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் வளர்ச்சி மன்ற கூட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பது குறித்தான ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.மாநில முதல் முதலமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை ஏற்படுத்திட வேண்டும். அக்குழு ஆண்டுக்கு ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலை வளம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒருசேர மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
காடுகளின் பரப்பளவை உயர்த்த வேண்டும். ஹெலிகாப்டர்களை கொண்டு மரங்கள் வளர்ப்பிற்கான விதைகள் துவப்பட வேண்டும். வனத்துறையில்
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டு செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.
வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வனவிலங்குகள் தன் வசிப்பிடத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும் வனவிலங்குகளின் வசிப்பிடத்தில் குடியிருப்புகள் உருவாக்குவதற்கு முழுமையான தடை விதித்திட முன்வர வேண்டும். வனவிலங்குகள் வசிப்பிடத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருக்கிற குடியிருப்புகள் சொகுசு விடுதிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்கள் மிகப் பெரும் பேரழிவை சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது, இதனை உணர்ந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்’.
மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.