Tamilnadu Urban local body elections counting incidents: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக, இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் வாக்கு எண்ணும் மையம் அருகே திரண்டு இருந்தனர். காலை 7 மணி முதல் கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மைய முகவர்கள் செல்போன் மற்றும் பேனா போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அப்போது கைக்குழந்தையுடன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்த ஒரு பெண் வேட்பாளரை போலீசார் தடுத்து, கைக்குழந்தையை உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் வேட்பாளர் கைக்குழந்தையை தனது அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார்.
இதையும் படியுங்கள்: சென்னை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: முழு ரிசல்ட் எப்போது?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இதேபோல், கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தாமதம் ஆனது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் ஒட்டுகள் எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது. தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி இல்லாததால் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது. அதன்பின் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நாற்காலி மற்றும் பேனா வழங்கப்படவில்லை எனக் கூறி, சிலர் திடீரென ரகளையில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கை சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு சமாதானம் செய்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
கோவை மாநகராட்சி 32 வது வார்டில் பதிவான வாக்கு எந்திரத்தை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட போது அதில் சீல் சரியாக வைக்கவில்லை. முகவர்களின் கையெழுத்து அதில் இடம் பெறவில்லை என்றும், இந்த வெற்றியை ரத்து செய்து மறு தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று கோரி வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.க. மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு அவர்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.