Advertisment

திக்.. திக்.. திருநெல்வேலி.. அல்வா நகரில் அசத்தல் ரிசார்ட் அரசியல்!

இந்தப் பகுதி சட்டசபை சபாநாயகர் அப்பாவுவின் சொந்த தொகுதி. இங்கு திமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன். இருவருக்குமே எப்போதும் ஆதிக்கப் போட்டி என்பது ஊரறிந்த ரகசியம்.

author-image
WebDesk
New Update
tamil nadu civic polls 2022

tamil nadu civic polls 2022

த . வளவன்

Advertisment

நெல்லை மாநகராட்சியை 16 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியிருக்கிறது திமுக.  இதேபோல் திசையன்விளை பேரூராட்சியை தவிர  மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி, திமுக அதிக வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்திருப்பதால் அரண்டு போய் கிடக்கிறது அதிமுக.

திருநெல்வேலி மாநகராட்சியில் 2 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் மேயர் இருக்கையை  அலங்கரித்துள்ளன.   தற்போது ஆறாவது முறையாக நடைபெற்ற தேர்தல் முடிவில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 55 வார்டுகளில்’  47 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 43 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒருவரும் திமுக அபிமானி என்பதால் திமுகவின் பலம் 44 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய மூன்று நகராட்சிகளிலும்  திமுக முன்னிலை வகிக்கிறது.  இதில் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரண்டு நகராட்சிகளை திமுக கூட்டணி தனியாக கைப்பற்றிய நிலையில்  புதிதாக உருவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியில்’ சுயேச்சை வேட்பாளர்கள்  ஆதிக்கம் நிலவியது.  இதனால் நகராட்சி தலைவர் பதவியை பிடிப்பது யார் என்பதில்  போட்டி  ஏற்பட  வெற்றி பெற்ற சுயேட்சைகளை  பணிய வைத்ததன் மூலம் களக்காடு நகராட்சி தற்போது திமுக வசம்.  

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகள் தேர்தல் முடிவுகள் வெளியானதில் திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதாவது 12 பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளது. அதிமுக, ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திசையன்விளை பேரூராட்சியை மட்டும் கைப்பற்றியுள்ளது. திசையன்விளையில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவு அதிகம் என்பது இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டாலும்  உண்மையான காரணம் வேறு.

publive-image
அப்பாவு, ஆவுடையப்பன், மகேஸ்வரி

இந்தப் பகுதி சட்டசபை சபாநாயகர் அப்பாவுவின் சொந்த தொகுதி. இங்கு திமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன். இருவருக்குமே எப்போதும் ஆதிக்கப் போட்டி என்பது ஊரறிந்த ரகசியம். மாவட்ட செயலாளர் பரிந்துரையின் பேரில் திசையன்விளை நகர செயலாளர் கென்னடி தனது ஆதரவாளர்கள் 18 பேருக்கு சீட் வாங்கி கொடுத்தார். சீட் விவகாரத்தில் அப்பாவு ஆதரவாளர்கள் புறக்கணிக்கப் பட்டனர். விளைவு. தனது ஆதரவாளரான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் துணையுடன் 18 பேர் போட்டி வேட்பாளர்களாக களம்  இறக்க  பட்டதன் விளைவாக திமுகவின் வாக்கு வாங்கி ஆட்டம் கண்டது. வெறும் 2 வார்டுகளுடன் திமுக மண்ணைக் கவ்வ, அதிமுக 9 வார்டுகளை எளிதாக வென்றிருக்கிறது. தற்போது இது தலைமைக்கு புகாராகப் போக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது திமுக தலைமை.

நெல்லை மாநகராட்சியை பொறுத்த வரையில் மேயர், துணை மேயர், 4 மண்டல சேர்மன்கள் என 6 பதவிகள் உள்ளன. இது போல மூன்று நகராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் என ஆறு பதவிகள், 17 டவுன் பஞ்சாயத்துகளில் தலைவர், துணை தலைவர்  34 பேர் என மொத்தம் 46 பதவிகள்  உள்ளன. இதில் திசையன்விளை தவிர பிற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளையும் திமுக கைப்பற்றுவது எளிது.

இதில் தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த கூவத்தூர் பாணி ரிசார்ட் அரசியலை முன்னெடுத்திருக்கிறது திமுக. 16 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியிருக்கும் நெல்லை மேயர் இருக்கையை முன்னாள் அதிமுக துணை மேயரும் தற்போது கவுன்சிலர் தேர்தலில் தனது செல்வாக்கால் எளிதாக வென்றவருமான ஜெகந்நாதன் தனது பணபலம் மூலம் குறி வைப்பதாக நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் வகாப்புக்கு தெரிய வர மனிதர் அலர்ட் ஆகி விட்டார். உடனடியாக சில கவுன்சிலர்களை தவிர 35 கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்த வகாப் அவர்களை கன்னியாகுமரி ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்தார். அதிலும் திருப்தியடையாத வகாப் ஒரு கட்டத்தில் கேரளாவில் மிக பிரபலமான பூவேலி  ரிசார்ட்டில் அவர்களை தங்க வைத்திருக்கிறாராம்.

நெல்லை மாநகராட்சியை பொறுத்த வரையில் மேயர், துணை மேயர் மற்றும்  மண்டல சேர்மன் பதவிகள்’ முக்கிய சாதிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையுடன் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால் இப்போது சாதி அரசியலும் கொடிகட்டி பறக்கிறது.  நெல்லையில் 4 மண்டல தலைவர் பதவிகளில் மேலப்பாளையம் மண்டல சேர்மன் பதவி சிறுபான்மையினருக்கும்,  பாளை  மண்டல சேர்மன் பதவி பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்னதான் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை இருந்தாலும் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவி பட்டியலில் இடம் பெற்றுள்ள கவுன்சிலர்கள் பின்புலம் குறித்து உளவுத்துறை மூலம் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான காவல்துறை உயர்  அதிகாரிகள் மூலம் விசாரிக்கும் படலத்தையும் ஆளும் கட்சி ரகசியமாக மேற்கொண்டு வருகிறது. முக்கிய பொறுப்புகளை வகிக்கக் கூடியவராக தகுதி படைத்தவர்கள் பட்டியலை வழங்க  மாவட்ட செயலாளர், மாவட்ட அமைச்சர், தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படும் அமைச்சர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.   அதன்படி அவர்கள் பட்டியலை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அந்த  பட்டியலுடன் முதல்வரின் குடும்பத்தினர், நண்பர்கள் பரிந்துரைத்த பட்டியலையும் இணைத்து உளவு அமைப்புகளுக்கு வழங்கியிருக்கிறது திமுக தலைமை.  அவர்கள் மீதான குற்றப்  பின்னணி மக்கள் செல்வாக்கு, கட்சி மாறிய விவரங்கள், கீழ்மட்ட தொண்டர் செல்வாக்கு என 20 வகையான கேள்விகள் அடிப்படையில் உளவுத் துறையினரால்  மார்க் வழங்கப் பட்டுள்ளதாம். இந்த பட்டியலில் இருந்தே மேயர், துணை மேயர் மற்றும்  முக்கிய பதவிகள் வழங்கப் படும் என்று தெரிகிறது.

நெல்லையை பொறுத்த வரையில் பிள்ளை இனத்தாருக்கு மேயர் பதவி செல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் மாவட்ட செயலாளர் ஆதரவு பெற்ற  மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி செந்தில், கிட்டு, உலகநாதன், டி . எம் சரவணன் போன்றோர் பட்டியலில் இருக்கின்றனர். இவர்களில்  மகேஸ்வரி’ நெல்லை இருட்டுக்கடை சிங் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது கணவர் பிள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதாலும்  மாவட்ட செயலாளரின் பரிந்துரை இருப்பதாலும்  இவர் மேயராக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக யாதவர் இனத்தை சேர்ந்தவர்கள் நெல்லையில் அதிக அளவில் வசிக்கின்றனர். இதனால் தேர்தல் பொறுப்பாளரும்   அமைச்சருமான ராஜகண்ணப்பன் சாய்ஸ் அவரது பரிந்துரையுடன் சீட் வாங்கி வென்ற ராஜு, பெண் கவுன்சிலர் கோகுல வாணி, டாக்டர். சங்கர்  மூவரில் ஒருவராக இருக்கலாம்.

publive-image
டாக்டர் சங்கர், கருப்பசாமி மற்றும் சுப்ரமணியன்

இதுவரை தேவர் சமுதாயத்தவருக்கு மேயர் பதவி கொடுக்கப்படாததால் எங்களுக்கே மேயர் பதவி என அழுத்தம் கொடுக்கின்றனர் தேவர் அமைப்பினர். அதன்படி உதயநிதி ஸ்டாலின் வழியாக சீட் பெற்ற பாரம்பரிய திமுக அரசியல்வாதி கோட்டையப்பன் மகன் பொறியாளர், கருப்பசாமி, அல்லது  அரசியல் அனுபவத்துடன்  ஏற்கனவே   நெல்லை மண்டல சேர்மனாக இருந்த   சுப்பிரமணியன் இருவரில் ஒருவர் மேயர் ஆகலாம்.

இந்த ரேஸில் மேயர் பதவியை நாடார் சமுதாயத்துக்கே வழங்க வேண்டும் என தீர்மானம் போட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர் தட்சணமாற நாடார் சங்கத்தினர். நெல்லை  மாநகராட்சியில் நாடார் இனத்தவர் தான் பாளை பகுதி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாலும், அதிகளவில் நாடார் இனத்தவர் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் எங்களுக்கே மேயர் பதவி என அவர்களும் தங்கள் பங்கிற்கு குரல் எழுப்பியுள்ளனர்.

இதில் ஒரு இனத்தவருக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டால் அடுத்த இனத்துக்கு துணை மேயர் பதவி வழங்கப் படலாம் என்பதால் தமது அனைத்து சாஸ்திரங்களையும் பயன்படுத்தி இப்போதே  சிலம்பு சுழற்றுகின்றனர்  திமுக வி ஐ பிக்கள்.

இந்த பரபரப்புகளுக்கு நடுவில் வரும் மார்ச் 2ம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா நடக்கிறது. தொடர்ந்து வரும் 4ம் தேதி மேயர், துறவி மேயர் மற்றும் உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இதனால் வரும் 2ம் தேதி முதல் அடுத்த கட்ட பரபரப்பு தொடங்கி விடும். இதில் வெல்லப்   போவது யார் என்பது சஸ்பென்சாக இருப்பதால் திக்..  திக் மனநிலையில் இருக்கின்றனர் திமுகவினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment