தமிழகத்தில் நேற்று சனிக்கிழமையன்று 18 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதால், தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணியளவில், தமிழகத்திற்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்தது. அவை இரவோடு இரவாக சாலை வழியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. எனவே ஞாயிற்றுக்கிழமை முதல் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸை செலுத்த விரும்புபவர்கள் செவ்வாய்கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், தடுப்பூசியின் அடுத்த பங்கு செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி அளவுகளின் கையிருப்புக்கும் செலுத்தப்படும் தடுப்பூசி அளவுகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தடுப்பூசி பெற்றவர்களின் விவரங்கள் அதேநாளில், பதிவேற்றப்படாமல் அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்யப்படுவதாலும், சில இடங்களில், 10 டோஸ் அளவை 11 பேருக்கு செலுத்துவதாலும் இந்த குழப்பங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த வாரத்தில், தினசரி அதிகபட்சமாக 1.3 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் உள்ளிட்ட, மேற்கு மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. இதேபோல்,தெற்கு மாவட்டங்களிலும் பற்றாக்குறை இருந்து வருகிறது.
தடுப்பூசி இருப்பு உள்ள இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தடுப்பூசி முகாம்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு சரிவர கிடைக்க பெறாததால், அவர்கள் சிரமத்தை அனுபவிப்பதாக பொதுமக்களில் சிலர் கூறி வருகின்றனர்.
கடுமையான தடுப்பூசி பற்றாக்குறைக்கு மத்தியில், 4,000 கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். மாநில தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்த சிறப்பு தடுப்பூசி முகாமை மாநில வணிக வரி அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil