கடந்த சில மாதங்களாக தி.மு.க வி.சி.க கட்சிகளுக்கு இடையே மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று தொண்டர்களுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கடந்த அக்டோபர் 27-ந் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். இதற்கு முன்னதாக விஜய் முதல் அரசியல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று வி.சி.க தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், நேரடியாக தி.மு.கவை தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது பேச்சின் இறுதியில் எங்கள் கொள்ளைகளை ஏற்றுக்கொண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு அளிக்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாக வி.சி.க சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்ததால், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க வி.சி.க கூட்டணி முறியும் என்று தகவல்கள் இணையத்தில் பரவத்தொடங்கியது.
இதனிடையே தற்போது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் தொடர்வோம் என்று உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும்.
குழப்பம் தேவையில்லை. "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்! என்று கூறியுள்ளார்.
மேலும் நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ, சமூகவைலதளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். தி.மு.க.கூட்டணியில் உள்ளதால் அடிப்படையில் குறிவைக்கப்படுகிறோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019-ம் ஆண்டு முதல் மகத்தான வெற்றியை குவித்து வருகிறது. கூட்டணியை சிதறடிக்க முயற்சிப்பவர்கள் நம்மை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். திட்டமிட்டு நம் மீது அய்யத்தை எழுப்புவோர் தி.மு.க வி.சி.ககூட்டணிக்கு எதிரானவர்கள்.
நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில் தான் தொடர்கிறோம் தொடர்வோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைபாட்டை வெல்ல, நம்மை வலுப்படுத்த கவனம் குவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“