தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், தற்போது மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை 5 கேள்விகளை முன்வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து தான் விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
தற்போது தனது 69-வது படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பல கட்ட ஆலோசனைக்கு பிறகு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாநாடு தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 27-ந் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள். அப்போது மழை பெய்தால், அதற்கான முன்னேற்பாடுகள் என்ன செய்திருக்கிறீர்கள்? வாகனங்கள் நிறுத்தும் இடத்தை இதுவரை நீங்கள் உறுதி செய்து தரவில்லை. தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உடனடியாக உறுதி செய்து அதற்கான வரைபடங்களை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட வாரியாக எத்தனை வாகனங்கள், எந்த மாதிரியான வாகனங்கள் வரும் என்ற பட்டியலை முன்கூட்டிய காவல்துறைக்கு தர வேண்டும்.
ஏற்கனவே 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி நேட்டீஸ் அனுப்பியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil