மீன்பிடித் தடைக் காலத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 100 நாள் வேலைக்கான தினசரி சம்பளத்தை அடிப்படையாக வைத்து 18 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என இன்று ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளேன் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
மீனவ மக்களின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, தடைக் காலத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை MGNREGA இல் நிர்ணயிக்கப்பட்ட தினசரி ஊதியத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் 18000/- ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்.
வலைகள் போன்ற அத்தியாவசிய மீன்பிடி உபகரணங்களுக்கான கடந்தகால மானியங்களை சீராய்வு செய்து உயர்த்துவது தடைக் காலத்தின்போது மீனவ மக்களின் கடன் சுமையைக் குறைக்கும்.
குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்ட மாற்றுக் கடன் வாய்ப்புகளை ஆய்வு செய்வது, பொதுத்துறை வங்கிகள் (PSBகள்) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவது மீனவ மக்களை சுரண்டும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களை அவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.
தடை காலத்தையும், பெருமழைக் காலத்தையும் ஒன்றாக இணைப்பது மீன்பிடிப்பதற்கான காலத்தை அதிகரிக்கச் செய்யும். இல்லையெனில், தமிழக மீனவர்களுக்கு சுமார் 4 மாதங்கள் (2 மாத தடை காலம் மற்றும் 2 மாதங்கள் பெருமழைக் காலம்) வேலை மறுக்கப்படுகிறது.
மீன்பிடித் தடையானது எந்தவித அறிவியல் ஆய்வும் மேற்கொள்ளாமலும், அது தொடர்படைய மீனவ மக்களைக் கலந்தாலோசிக்காமலும் ஒருதலைப்பட்சமாக ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. மீன்பிடித் தடைக் காலத்தால் உண்மையிலேயே பலன்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதை அறிய அறிவியல் பூர்வமான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“