பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ குட்கா அரகண்டநல்லூரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்புரம் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகே அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவல் உதவி ஆய்வாளர்கள், லியோ சார்லஸ், தேவரத்தினம் மற்றும் காவலர்கள் தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டதில் அந்த வாகனம் நிற்க்காமல் அதிவேகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் போலீஸார் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்யும் நோக்கில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விலகவே அந்த வாகனம், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மற்றும் அங்கிருந்த வாகனங்களில் இடித்துவிட்டது.
மேலும் அந்த கார் நிற்காமல் வந்த திசையிலேயே திரும்பி திருக்கோவிலூர் மார்க்கமாக தப்பிச்சென்றதால் போலீசார் அதனை பின்தொடர்ந்து சென்று அரகண்டநல்லூர் காவல் நிலையம் எதிரே வாகனத்தை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாகனத்தில் நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
பெங்களூரிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்ததோடு வாகனத்தை சோதனை செய்ய நிறுத்திய போலீசாரை அதிவேகமாக வாகனத்தை இயக்கி கொலை முயற்சி செய்ய முற்பட்ட அவ்வாகனத்தின் ஓட்டுநர் உட்பட அதில் அமர்ந்து வந்த ஜாம்தா ராம் (24), மணீஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் 440 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து, பதிவெண் இல்லாத மகேந்திரா XUV என்ற நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு 2 பேரையும் நீதிமன்ற கைது செய்து சிறையில் அடைத்தது