பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவிதொகைக்கான ஆணைகளை மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த தொழிலாளர்களின் 38 குழந்தைகளுக்கு ரூ.5.62 லட்சம் மதிப்பிலான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) மாதந்தோறும் ரூ.2000/- மற்றும் தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) ரூ.4000/- வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.