விருதுநகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பான 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பார்வையாளர்களுக்காக ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பல உல்லாச உபகரணங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று இரவு, கவுசல்யா (வயது 22) என்ற இளம்பெண் ராட்டினத்தில் ஏறியபோது, பாதுகாப்பு காரணமாக கால்கள் வைக்கப்படும் இடத்தில் பூட்டும் வசதி மற்றும் பெல்ட் அணியுமாறு இயக்குபவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
அவர் பாதுகாப்பு சாதனங்களை சரியாக பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ராட்டினம் தலைகீழாகச் சுழலும் போதே கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டவுடன் ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பலத்த காயம் அடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு, ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆபரேட்டர் முகேஷ் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.