தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது இப்போது சர்ச்சையாகி உள்ளது.
Advertisment
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்
ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்றார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர் தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆளுநர் ரவியின் பேச்சை விமர்சித்த சு வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், ''தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா. தோழர் பூபேஷ்குப்தா என்று எங்கள் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத் தானே செய்யும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு வெளியிட்ட அறிக்கையில் , ''வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது.
அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச்செல்லும் முடிவை அவர்தான் எடுக்கவேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ட்வீட்டரில் வெளியிட்ட பதிவு
கனிமொழி எம்.பி. ட்வீட்டர் பதிவு
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆளுநர் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, இந்திய அளவில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“