வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்ற நிலையில், நேற்று முன்தினம் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் தென் தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களான, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லைக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“