Tamil Nadu Weather Report: வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மூன்று தினங்களுக்குத் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய 13 மாவட்டங்களில் 26,27,28 ஆகிய தினங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், 40-50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்களைச் செல்ல வேண்டாம் என்று அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"