Tamilnadu weather forecast updates: தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுக்கிறது.
மே 4-ம் தேதி தொடங்கிய இவ்வெயில் வரும் 29-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் (மே 27 மற்றும் 28) தமிழகத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வானிலை மைய அறிக்கையில், “இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பான அளவை விட வெயில் கூடும். கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் வெப்ப சலனத்தால் லேசான மழை பெய்யலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
அதோடு நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.