Tamilnadu Weather Updates: ஒருவழியாக அக்னி நட்சத்திர வெயில் முடிந்துவிட்டது.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக நம்மை வாட்டி வதைத்த வெயிலிடம் இருந்து விடைப்பெற்று விட்டோம். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மெதுவானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
வெப்பக்காற்றைப் பொறுத்தவரை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிக பட்சமாக 38 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் பதிவாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்பு எப்போதையும் விட தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது. வட கிழக்குப் பருவமழை பொய்த்து விட்ட காரணத்தினால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் மக்கள்.
இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இன்னும் ஒரு வாரத்தில் தமிழக எல்லையை தொடவிருக்கிறது, தென்மேற்கு பருவ மழை.
இந்திய பெருங்கடல், அரபி கடல், வங்க கடல் ஆகியவற்றிலும், பசிபிக் பெருங்கடலிலும், சாதகமான சூழல்கள் உருவாகியுள்ளதால், இந்திய பகுதிகளை நோக்கி, மேகக் கூட்டங்கள் வர துவங்கி உள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில், கேரளா மற்றும் தமிழக - கேரள எல்லை பகுதிக்குள், பருவ மழை நுழையும் வாய்ப்புள்ளது. வரும் நாட்களில், மேற்கு மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம்.