IMD Chennai: கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மெதுவானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கக் கூடும். ஆகையால் இந்த மாவட்ட மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனல் காற்று
மே மாதமே முடிந்த பிறகும் கூட அனல் காற்றில் இருந்து சென்னைவாசிகளால் தப்பிக்க இயலவில்லை. இன்று முதல் 12ம் தேதி வரை சென்னையில் அனல் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்கள். மழை வராமல் ஏமாற்றுவது சென்னை மக்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக நாளை 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.