Tamilnadu Weather Updates: அக்னி நட்சத்திரத்தினால் வறண்டு போயிருந்தது தமிழகம்.
தற்போது அது முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை, தனது தரிசனத்தை தந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலால் கொதித்து வந்த வேலூர் மக்களை இந்த மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தேனியின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை விவசாயிகளை குஷி படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தின் பல இடங்களில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி ,மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இடியுடன் 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.
கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பக் காற்று வீசும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கோடை மழை இருப்பதாக உறுதி செய்தார். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தென் தமிழகத்தைல் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
2019-ம் ஆண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என கூடுதல் தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது.