Tamilnadu Weather: தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
சென்னை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் எப்போதுமே வெயில் அதிகமாக இருக்கும். இந்த முறை சென்னைக்கு வரவிருந்த ஃபனி புயல் திசை மாறியதால் கூடுதலாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் முன்பு எப்போதையும் விட, இந்த முறை கூடுதலாக வெயிலின் தாக்கம் இருப்பதை முன்பே வெதர்மேன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தின் துவக்க நாட்களான இந்த சமயங்களில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகக் கூடும். தமிழகம் முழுவதும் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மே 7 வரை அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே அக்னி நட்சத்திரத்தின் இரண்டாம் நாளான நேற்று, தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
அதோடு வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்றபடி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசுவது தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.