கஜ புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் புயல் கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகைக்கு வடகிழக்கே 187 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் கஜ புயல், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது.
நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இந்த 7 மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகையில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கஜ புயலால் சென்னை பாதிக்கப்படுமா? சென்னையில் மழை எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளும் மக்கள் மனதில் எழாமல் இல்லை. அவற்றிற்கு பதில் அளித்திருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானியல் ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கஜா புயலால் சென்னை முதலில் மழையைப் பெற்றுள்ளது. கஜா புயல் கடற்கரையை நெருங்கும்போது, மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும். நாகை-வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடந்தபின் உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.
கஜா புயல் தீவிரமடையும்போது, மேகக்கூட்டங்களை மிகநெருக்கமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும். எப்படியாகினும், புல்-எஃபெட் மூலம், சென்னைக்கு அவ்வப்போது 16, 17-ம் தேதிவரை இடைவெளிவிட்டு மழை பெய்யும். மீண்டும் சொல்கிறேன், இது சென்னைக்கான புயல் அல்ல, ஒருபோதும் அவ்வாறு வரவில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் மழை போனஸ் போன்றது, அடுத்த 3 நாட்களில் நமக்கானது கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
‘கஜ’ புயலின் தகவல்கள் குறித்து உடனுக்குடன் நீங்கள் அப்டேட் தெரிந்து கொள்ள ‘கஜ புயல் லைவ் அப்டேட்ஸ்’ என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
மேலும், கஜ புயலை எதிர்கொள்ள தேவையான டிப்ஸ் என்னென்ன என்பது குறித்து அறிய இங்கே க்ளிக் செய்யவும் கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்