”தமிழகத்தை விட்டு கஜ புயல் இன்னும் போகவில்லை.. மீண்டும் கஜ புயல் வர வாய்ப்பு இருக்கிறது” என பொதுமக்களால் அதிகம் பேசப்படும் வதந்திகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளித்துள்ளார்.
கஜ புயல் கரையை கடந்ததா?
வர்தா புயலுக்கு பின்பு தமிழக மக்களை உலுக்கி எடுத்து விட்டது கஜ புயல். ஆரம்பத்தில் இலங்கையில் மட்டுமே நிலைக் கொண்டுள்ளது என கணிக்கப்பட்ட கஜ புயல், திடீரென்று தமிழகத்தின் பக்கம் திரும்பியது அனைவருக்கும் பீதியை உண்டாக்கியது.
புயலை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் என்று தமிழக அரசு தொலைக்காட்சிகளில் விவரித்தாலும், பொதுமக்களுக்கு கஜ மீதான அச்சம் சிறிதளவு குறையவில்லை. நாகை, திரூவாரூர், தஞ்சை, காரைக்கால் , வேதாரண்யம் போன்ற பகுதிகளில் புயலின் தாக்கம் கணித்ததை விட சற்று அதிகமாகவே இருந்தது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கஜ, தனது கண் பகுதியை அடையும் போது எடுத்த விஸ்ரூப ஆட்டம் பார்ப்பவர்களையும் மிரள வைத்தது. இத்தனை கோரதாண்டவத்திற்கு பின்பு ஒருவழியாக கஜ நேற்று காலை கரையைக்கடந்தது. புயலுக்கு பின்பு கனமழையும் கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கஜ புயல் தமிழகத்தை விட்டு முழுமையாக செல்ல வில்லை, கஜவினால் சென்னைக்கும் ஆபத்து இருக்கிறது. மீண்டும் கஜ வரும் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழ்நாடு வெதர்மேன் நேற்று கணித்தது நடந்ததா?
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல், தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களுக்கு விளக்கியுள்ளார். இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது,
”தமிழகத்தை நோக்கி வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்து, மத்திய மாவட்டங்களை வழியாகக் கேரளா நோக்கிச் செல்கிறது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும் போது வலுவிழந்த ஆழ்ந்த புயலாகச் செல்லும்.
தமிழகத்தைத் தாக்கி சேதப்படுத்திய வர்தா புயலுக்கு அடுத்தார்போல், கஜா புயலைக் கூறலாம். அதுமட்டுமல்லாமல், கடந்த 1993-ம் ஆண்டுக்குப்பின் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்த கடுமையான சேதங்களை விளைவித்தது கஜா புயலாகும்.
கஜவினால் ஏற்பட்ட உயிர் பலி
டெல்டா மாவட்டங்களுக்குள் நுழைந்ததில் இருந்து கஜா புயல் மிகவேகமாக நகர்ந்து சென்றது. நிலப்பகுதியைக் கடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலில் சென்று கஜா புயல் வலுவிழந்து, ஏறக்குறையத் தமிழகத்தை கடந்து விட்டதால், கஜாபுயல் குறித்த வதந்திகளையும், மீண்டும் கஜா வருகிறது என்பது போன்ற வீடியோக்களையும் நம்ப வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.