கரையைக் கடந்த கஜ புயலினால் அடுத்த நடக்கவிருப்பது என்ன? என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு :
கஜ புயல்.. பொதுமக்களுக்கு பெயரில் தொடங்கிய இந்த புயல் குறித்த அச்சம் கரையை கடந்தும் பின்பும் இன்னும் தீரவில்லை. இதுவரை வர்தா புயலைப்பற்றி அடிக்கடி பேசிய தமிழக மக்கள் இனிமேல் கஜ புயலைப் பற்றித்தான் அதிகம் பேசுவார்கள்.
கஜ புயலானது தனது கண் பகுதியை அடைய எடுத்துக் கொண்ட 2 மணி நேரத்தில் நாகை, திரூவாரூர், தஞ்சை, காரைக்கால் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கும் பணி ஓயாமல் நடந்து வருகிறது. ஒரு வழியாக புயலானது கரையைக் கடந்த விட்டது. இருந்த போதும் மழை இன்னும் நிற்காமல் பெய்து வருகிறது.
இந்நிலையில், புயலுக்கு பின்பு அடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
”தமிழகத்தை நோக்கி வந்த தீவிரமான கஜா புயல் நாகை மாவட்டத்தைக் கடந்த நிலையிலும் தீவிர புயலாகவே இன்னும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுபோல் நடப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். நாகை நகர் முழுவதும், திரூவாரூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டத்திலும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்றுவீசியது.
நாகை, வேதாரண்யம் பகுதிகளை கஜா புயல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரை கடக்கும் போது, மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசியது.
குறிப்பாக அதிராமபட்டிணத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் மணிக்கு 111 கி.மீ வேகத்திலும், நாகையில் 2.30 மணி அளவில் மணிக்கு 100கி.மீ வேகத்திலும், காரைக்காலில் 92 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
கஜா புயலில் வீசிய காற்று கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலுக்கு ஒப்பாக இருந்தது. கடந்த ஆண்டு சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் போது, மீனம்பாக்கத்தில் 122 கி.மீ வேகத்திலும், நுங்கம்பாக்கத்தில் 114கி.மீ வேகத்திலும், எண்ணூரில் 89 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
புதுக்கோட்டை, சிவகங்கையின் வடபகுதிகள், திருச்சியின் தென் பகுதி, கரூர் மாவட்டத்தின் தென் பகுதிகள், திண்டுக்கல், மதுரையின் வடபகுதி, தேனியின் பல்வேறு பகுதிகளில் கஜா புயல் காற்றின் தாக்கம் இருக்கும். இந்த மாவட்டங்களில் கஜா புயலின் தாக்கம் இருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும். கொடைக்கானல் பகுதியில் பலமான காற்றும், கனமழையும் பெய்யும் என்பதால், அங்கு தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும். வெளியே வர வேண்டாம்.
திருச்சி , கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள், வால்பாறையின் சில பகுதிகள், விருதுநகரின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதி ஆகியவற்றில் இன்று கனமழை பெய்யக்கூடும்.இன்று மாலைக்குப் பின் கஜா புயல் கேரளா பகுதிக்கள் நுழைந்துவிடும்.
இடுக்கி மாவட்டத்தில் கஜா புயலால் கனமழை இருக்கும். விடுமுறை காலத்தில் மூணாறு நகரம் வந்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். குறைந்த நேரத்தில் அதிகமான மழை பொழிவு இருக்கும் என்பதால், இடுக்கி மாவட்டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புழா ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை இருக்கும்.கஜா புயல் நகரும் பகுதிகளில் எல்லாம் தொடர் மழை இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை புல்-எஃபெகட் மழை நமக்கு அடுத்த இரு நாட்களுக்கு இருக்கும். அதேசமயம், அடுத்தவாரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர மாவட்டங்களில்
மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.