தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் 25சென்டி மீட்டருக்கு அதிகமாக அன்றைய தினம் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெட் அலர்ட் அறிவிப்பு பொதுமக்கள் பலரையும் அச்சுறித்தியுள்ளது. இந்நிலையில் ரெட் அலர்ட் மற்றும் தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மே தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது, “ சென்னையில் இன்று பகலில் விட்டுவிட்டு மழைப் பெய்யும். இன்று இரவும் நாளையும் தமிழகம் முழுவதும் நல்ல மழைப் பெய்யும்.மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுழற்சி வடதமிழகம் நோக்கி நகரும்.
மழைபெய்யும் மாவட்டங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது.. தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். மேற்குத் தமிழக மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று மாலை முதல் நல்ல மழை பெய்யும்.
மதுரை மற்றும் ராமநாதபுரத்திலும் நல்ல மழை பெய்யும்.ஒட்டு மொத்தமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும்.