நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்தப் காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22, 23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (மே 23) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“