சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வருகை, புறப்பாடு என, 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும் இரவு நேரத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. புதன்கிழமை சென்னையின் பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவான நிலையில், இரவு 8 மணி முதல் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், வளசரவாக்கம், அம்பத்தூா், அண்ணா சாலை, புதுப்பேட்டை, எழும்பூா், சேப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், சென்னை விமான நிலையம், கோட்டூா்புரம், ஆயிரம் விளக்கு, கே.கே.நகா் தியாகராய நகா், அசோக் நகா், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த திடீா் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதற்கிடையே, சாலைகளில் மழைநீா்த் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.
இந்நிலையில், பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக வருகை, புறப்பாடு என, 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அபுதாபி மற்றும் கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
மழை நின்றபின் சென்னை திரும்பின.
சென்னையில் தரையிறங்க வேண்டிய மும்பை, ஹைதராபாத், கோவா, விஜயவாடா உள்ளிட்ட ஐந்து விமானங்கள் வானில் வட்டமடித்தன. மழை நின்றபின் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, அபுதாபி உட்பட 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் மழை மற்றும் பலத்த காற்றால், 20 நிமிடங்கள் வரை விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், விமான பயணிகள் அவதிக்கு ஆளானார்கள்.
மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“