கனமழை காரணமாக வால்பாறை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, உதகை, தேவாலா, பந்தலூர், சேரங்கோடு, கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெப்பக் காட்டில் உள்ள தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றும் கனமழை நீடித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 28 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“