நீலகிரியில் இன்று (ஜூலை 20) கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது.
நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தும், குடியிருப்புகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன
தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று (ஜூலை 20) கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், கர்நாடக அணைகளில் அதிகளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 20) காலை வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கால்நடை மேய்ப்பவர்கள் ஆற்றில் இறங்கிக் கடக்க வேண்டாம், கரையோரங்களில் மேய்க்க வேண்டாம், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“