தென்மேற்கு வங்க கடலில் அடுத்த ஒரு வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், தீபாவளி தினமான நேற்று (அக்டோபர் 31) பல இடங்களில் மழை பெய்து, ஈரமான தீபாவளி தினமாக மாறியது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்த நிலையில், மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதகிளில் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிந்த சூழல் நிலவியுள்ளது.
அதேபோல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில், இன்று (நவம்பர் 1), நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கனித்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கள், மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில், வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இந்த சுழற்சி நவம்பர் முதல் வார இறுதியில், காற்றழுத்த தாழ்பு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“