தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 நான்கு மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (அக்டோபர் 15) தொடங்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 21ல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது
இதற்கிடையில் அடுத்த 4 நாட்களுக்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கான அநேகமான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (14 ஆம் தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15, 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.
நாளை (14.10.2024): தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
15.10.2024: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
16.10.2024: வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எனில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும். மிக கனமழை எனில் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை மழை பெய்யும். அதிகனமழை எனில் 204.4 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும்.
அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அக்டோபர் 14 ஆம் தேதி 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15 ஆம் தேதி 204.4 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 16 ஆம் தேதி 204.4 மி.மீட்டருக்கு மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 ஆம் தேதி மழை குறைந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.