தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பல மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
அதிகபட்சமாக வடகுத்து (கடலூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை) தலா 130 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல ராசிபுரம் (நாமக்கல்) 120 மி.மீ, சேலம் (சேலம்) 110 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் என மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து இருக்கிறது.
வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக ஈரோட்டில் 17.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று (அக்டோபர் 6) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய (அக்டோபர் 7) தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 9 ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 10 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 11 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 12 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் அக்டோபர் 8 முதல் 10 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.