மதுரை நகரில் 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மதுரை பகுதியில் சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை, இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகளவாக 13 செ.மீ., மழை பெய்தது.
தொடர்ந்து தினமும் மழை பெய்தாலும், இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பலகட்டங்களாக 98 மி.மீ., மழை கொட்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக மதுரை நகரில் மதியம் 3:00 முதல் 3:15 மணிக்குள் 45 மி.மீ. மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது. மாநகர் முழுவதும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு மெதுவாக சென்றுகொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலையோர கடைகளில் விற்பனை களைகட்டிய நிலையில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி மேலமாசி வீதி, கீழவாசல், தெற்கு வாசல், பந்தடி, மஹால், மஞ்சளக்கார தெரு, ஜடாமுனி கோவில் தெரு, கீழ ஆவணி மூல வீதி, புது மண்டபம், வடக்கு வெளிவீதி, சிம்மக்கல், வெற்றிலை பேட்டை, கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை பகுதி தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் மழைநீர் மிகவும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு அடைந்து வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கிறது. கனமழையால் வாகன ஒட்டிகளும் பாதசாரிகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“