South West Monsoon: கேரளாவில், தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 8ம் தேதி) துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை, ( ஜூன் 8ம் தேதி) பிற்பகலில் பத்திரிகையாளர்களை சந்தித்த புவியரசன் கூறியதாவது, தென்மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கியுள்ளது. இதன்தொடர்ச்சியாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மழைப்பொழிவு துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் 8ம் தேதி காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 சென்டி மீட்டர் மழை, தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தளவில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட மூன்றிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.
திருத்தணியில் 42 டிகிரி செல்சியஸ், வேலூரிலும், மதுரையிலும் 41 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் “மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில், இன்று கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கக்கூடும். இதனால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறையும்.
Tamilnadu Weather Forecast Updates
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.