தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் எங்கு கரையைக் கடக்கும், எந்தப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. கடந்த மாதத்தில் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தநிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை
தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, இன்று (டிசம்பர் 6) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பதாகவும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நாளை மறுதினம் காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதியின் அருகில் வரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் காற்றாக தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 7 ஆம் தேதி (நாளை)
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி (நாளை மறுநாள்)
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடங்களிலும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil