தமிழகத்தில் கடந்து இரண்டு வாரங்களாக வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மூலம் மழை தொடருமா என்பது குறித்து பதில் அளித்துள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்.
மழை நிலவரம்:
மழை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் ‘கடைசியாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அது இவ்வளவு மழையைக் கொண்டு வரும் என்று கணிக்கவில்லை.
ஆனால், இந்த தாழ்வு பகுதி அனைத்து கணிப்புகளையும் மீறி, மிக அதிக மழையைக் கொண்டு வந்தது. குறிப்பாக, டெல்டா பகுதியில் அடுத்தடுத்த மழை பொழிவு இருந்து கொண்டே இருந்தது. தமிழக அளவில் வட கிழக்கு பருவமழை, பல இடங்களில் அதன் சராசரி அளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தான் சராசரியைவிட மழை பொழிவு குறைவாக இருக்கிறது. டெல்டா மற்றும் தென் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று பெய்வதுதான் கடைசி மழையாக இருக்கும். அதன் பிறகு அடுத்த சில நாட்களுக்கு சிறிய பிரேக் இருக்கும். இந்த மாத கடைசியில் மீண்டும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 226 மி.மீ மழை பதிவாகியுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.