தமிழகத்தில் நேற்று போல் கனமான மழை இருக்காது என்றாலும், இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை தண்ணீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் உடைமைகளை இழந்து தத்தளித்து வந்தனர்.
தற்போது சென்னையில் நிலைமை சீரடைந்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகனத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதால், தென் மாவட்டங்களாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றிற்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழை நேற்று போல் கனமாக இருக்காது ஆனால் இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil