தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 22) இரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையமும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுடன், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்படி திடீரென பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்றைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
சென்னை வானிலை மையம் அறிவித்தபடி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் இன்று அதிகாலை பரவலாக கனமழை பெய்தது. சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், கிண்டி, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், செப்டம்பரில் சென்னைக்கு முதல் சிவப்பு தக்காளி. இது மிகவும் பரவலான மற்றும் தீவிரமான ஒன்று. இதனால் இன்று இரவு சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், வருகின்ற 24ம் தேதி விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வருகின்ற 25 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 13 செ.மீ மழையும், சென்னை மெரினாவில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil