ஆறு மாதங்களாக மழையின் சுவடே பார்க்காத சென்னைவாசிகளே, இம்மாத பிற்பகுதியில், மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனா, ரொம்ப எதிர்பார்க்காதீங்க, ஏமாந்துருவீங்க என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, தமிழ்நாடு வெதர்மேன் ஸ்பெஷல் என்ற பெயரில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளபோதிலும், இன்று (ஜூன் 8ம் தேதி) இரவு முதலே மழை பெய்ய துவங்கும். மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய தமிழகத்தின் மாவட்டங்களில் நாளை ( 9ம் தேதி ) முதல் மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த தென்மேற்கு பருவமழையின் மூலம், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் 25 முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
கேரளாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு போதிய மழை பெய்யவில்லை. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளம் போன்று மழை பெய்ய வாய்ப்பில்லை.
தென்மேற்கு பருவமழையால், அடுத்துவரும் நாட்கள் கேரளாவிலும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் கர்நாடக மலைப்பகுதிகள், தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி , கோவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் நல்லமழை இருக்கும்.
குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள அணைப்பகுதிகள், தேனி மாவட்டத்தில் கூடலூர், பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள், தேக்கடி, நீலகிரியில் உள்ள அணைப்பகுதிகள், தேவாலா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழையால், கேரளாவின் மலப்புரம், வயநாடு, கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும்.
தமிழகத்துக்கு நீர் வழங்கக்கூடிய கர்நாடகத்தின் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணை அமைந்திருக்கும் பகுதிகளில், மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.