scorecardresearch

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுக்க கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிடும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுக்க கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், இந்த உத்தரவின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை உள்ளிட்ட பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும் அக்டோபர் 28-ந் தேதி முதல் உயர்நீதிமன்றவளாகத்தில் பிளாஸ்டிக் சேகரிக்கும் எந்திரம் வைக்கப்பட உள்ளதாகவும், பிளாஸ்டிக் தடை குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை கேட்டு மாற்று பொருட்கள் பயன்படுத்தும் தொடர்பான மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், இந்த பிளாஸ்டிக் பொருட்களை எத்தனை நிறுவனங்கள் தயாரிக்கின்றன, இதன் தயாரிப்பை ஏன் நிறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதிவு செய்யாமல் இயங்கி வரும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க வேண்டும், எத்தனை நிறுவனங்கள் அவ்வாறு இயங்கி வருகிறது என்று அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிடும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu why not stop the production of one time use plastic highcourt