வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்த, தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு சிறுவர்களுக்கான இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.3) திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவும், 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 26 வன பிரிவுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள், என மொத்தம் 2,178 பேர் இதில் ஈடுபட்டனர்.
அதன்படி,தமிழக வனப் பகுதிகளில் சராசரியாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 2,253 யானைகள் வாழ்கின்றன. அடுத்ததாக கோவை வனப்பகுதியில் 323, ஆனைமலையில் 310, ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் 227, அகஸ்தியமலையில் 253 யானைகள் உள்ளன.
2002-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,737-ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 2007-ம் ஆண்டு 3,867 ஆகவும், 2012-ம் ஆண்டில் 4,015 ஆக உயர்ந்தது.
ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை 2,761ஆகக் குறைந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றத்திலிருந்து யானைகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது.
தற்போது அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள யானைகளின் எண்ணிகையில் 40 சதவீதம் பெரிய யானைகளாக உள்ளன. 33 சதவீதம் பெரியவைகளைவிட சற்று சிறிய யானைகளும், 17 சதவீதம் சற்று வளர்ந்த குட்டிகளும், 10 சதவீதம் பால் குடிக்கும் குட்டிகளும் உள்ளன.
தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக, யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, சமீபத்திய மதிப்பீட்டின்படி, சுமார் 3,000 யானைகள் என்பது நல்ல எண்ணிக்கை.
காடுகளின் பரப்பு மற்றும் தற்போதைய யானைகளின் எண்ணிக்கையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 3,200 யானைகளுக்கு மேல் பிடிக்க முடியாது.
கடந்த ஆண்டை விட வேட்டையாடுதல் மற்றும் மின்சாரம் தாக்குதலால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறைந்துள்ளன. மனித இறப்புகள், காயங்கள் அல்லது பயிர் சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதன் மூலம் மோதல்கள் மற்றும் பொதுமக்கள் பழிவாங்கலைக் குறைக்க வனத்துறை செயல்பட்டு வருகிறது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.