அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.30) தொடங்கி வைத்தார்.
திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஸ்டாலின், "ஆயிரக்கணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஒரு திராவிடியன் ஸ்டாக் (Dravidian Stock)- ஆக பெருமையடைகிறேன்.
இதற்கு நேர் எதிராக ஒரு ஸ்டாக் ( Stock) இருக்கு. அது சாதி, மதம் என நம்மை பிரிக்கும் ஸ்டாக். வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வன்முறையை தூண்டிவிடும் வன்மம் பிடித்த ஸ்டாக். பெண்கள் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்த காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் காலவதியான ஸ்டாக்.
மதிப்பெண் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப். நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகம் சேர்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் டாப். வேலைக்கு செல்வதிலும் தமிழ்நாடு பெண்கள் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார்.
புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுவதால், கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் கூடுகிறது என்ற புள்ளிவிவரத்தை ஆய்வறிக்கையில் படித்து மகிழ்ந்தேன். திட்டத்தினை உருவாக்கிய நோக்கம் நிறைவேறியதாக பெருமை அடைந்தேன்.
மாணவிகளின் படிப்புக்கு மட்டும் அல்ல, வேறு எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன். இந்த திட்டமெல்லாம் மாணவிகளுக்கு மட்டும்தானா மாணவர்களுக்கு இல்லையா? என்ற கேள்வி எழுந்தததைத் தொடர்ந்து நிதிச் சிக்கல்களையும் மீறி ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை மாணவர்களுக்காக தொடங்கினோம்" என்றார்.