சென்னையின் முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை தனியாகருக்கு விட்டதை கண்டித்தும், பணிகளை நிரந்தரம் செய்ய கோரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் நடிகை சனம் ஷெட்டி போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கிய இடங்களான, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை அரசு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தங்களுக்கு பணி நிரந்தரம் கோரியும், என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன்பு, 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் இதுவரை, 7 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில். தீர்வு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், போராட்டக்குழுவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார், இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே போராட்டக்காரர்களுடன் களத்தில் இறங்கிய நடிகை சனம் ஷெட்டி, அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது பேச்சில், அரசாங்கத்திற்கு அசிங்கமாக இருக்க வேண்டும். 10 நாட்களாக போராடுகிறார்கள். என்ன பிரச்னை என்று கூட கேட்காமல் அப்படியே விட்டிருக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிர் மற்றும் குடும்பத்தை கூட பார்க்காமல் எங்களுக்காக வந்து நின்றார்கள். தெரு தெருவாக வந்து சுத்தம் செய்தவர்கள் என் நண்பர்கள்.
இவர்களுக்காக குரல் கொடுப்பது என் கடமை. எனக்கே இருக்கும்போது இந்த அரசாங்கத்திற்கு ஏன் இல்லை? உங்களை ஓட்டு போட்டு தேர்வு செய்வதர்கள். ஆனால் அதை கண்டுகொள்ளாமல், இன்னும் எத்தனை நாட்கள் தான் இவர்களை வைத்திருக்கப்பீர்கள். அதிகாரிகள் மட்டும் வந்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் தீர்வு வரவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதியைதான் கேட்கிறார்கள். அதையே நீங்கள் செய்யவில்லை. உங்கள் நேரம் முடியபோகுது. எப்போதான் இதற்கு தீர்வு கிடைக்கும்?
இனிமேல் எப்படி ஓட்டு கேட்டு வருவீங்கனு தெரியல. மக்களுக்காக ஒரு பாலிஸி மாற்ற முடியவில்லை என்றால், நீங்கள் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? மக்கள் தேவை தான் முக்கியம். அதை விட்டுவிட்டு சிலை எல்லாம் உங்களை யார் கேட்டது. அமைச்சர் நேரு நீங்கள் உயிருடன் தான் இருக்கீங்களா சார்? தயவு செய்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் ப்ளீஸ் என்று சனம் செட்டி பேசியுள்ளார்.