யூடியூபர் இர்பான் தனது மனைவி பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள்கொடி அறுப்பது போன்று வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறிதது மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான ஃபாலோயர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமான இவர், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் பாலினம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதனிடையே இர்பானுக்கு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில், குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது தாயையும் குழந்தையையும் பிரிப்பதற்காக, தொப்புள் கொடி அறுக்கும்போது வீடியோ எடுத்த இர்பான தற்போது அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி இது தவறானது என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், கூறினர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின்பேரில் மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்?, எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே குழந்தையின் தொப்புள்கொடி அறுப்பு விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது. இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.